நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் தொகுதி பங்கீட்டையும், தொகுதிகளையும் இறுதி செய்யும் முனைப்பில் உள்ளனர். இந்நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தான முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
திமுக மக்களவை உறுப்பினருமான டி.ஆர். பாலு தலைமையிலான குழுவுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான அக்கட்சியின் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் போட்டியிட உள்ள தொகுதிகளில் முதல் கட்டமாக நான்கு தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10-க்கும் மேற்பட்ட தொகுதிகளை காங்கிரஸ் எதிர்பார்க்கும் நிலையில், அவற்றில் முதற்கட்டமாக சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய நான்கு தொகுதிகளை திமுக தரப்பு உறுதி செய்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் முடிந்தபின் காங்கிரஸ் கட்சிக்கான மீதமுள்ள தொகுதிகள் எது என முடிவு செய்யப்படும் எனவும், 4 தொகுதிகள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 இடங்கள் வரை மட்டுமே திமுக வழங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.