மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையில் நடைபெறும் வெறுப்பு குற்றங்களுக்கு இடமில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது..
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் வெறுப்புணர்வை ஏற்படுத்திய பேச்சு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.. 62 வயதான கசீம் அஹ்மத் ஷெர்வானி என்ற நபர் தன்னை மதத்தின் பெயரில் சித்திரவதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தொடர்ந்தார். மேலும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் தனது மனுவில் “ கடந்த 2021-ம் ஜூலை 4 ஆம் தேதி, நொய்டாவின் செக்டார் 37 இல் அலிகார் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்தபோது, ஒரு குழுவினர் என்னை அவர்களின் வாகனத்தில் அழைத்து செல்வதாக தெரிவித்தனர்.. முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக என்னை துன்புறுத்தினர்.. சித்ரவதை செய்தனர்.. ஆனால் இதுகுறித்து புகார் அளிக்க சென்ற போது, குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸார் மறுத்துவிட்டனர்…” என்று குறிப்பிட்டுள்ளார்..
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. அப்போது நீதிபதிகள் ” மதசார்பற்ற இந்தியாவில் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் வேரறுக்கப்பட வேண்டும், அரசு இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.. இதுதான் அரசின் முதன்மை கடமை..” என்று தெரிவித்தனர்..
நாட்டில் வெறுப்பு குற்றங்கள் ஒப்புக்கொள்ளப்படுமா அல்லது அவை தடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் “ சிறுபான்மை அல்லது பெரும்பான்மை அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் மனிதர்களுக்கு உள்ளார்ந்த சில உரிமைகள் உள்ளன. நீங்கள் ஒரு குடும்பத்தில் பிறந்து ஒரு குடும்பத்தில் வளர்ந்தவர்கள், ஆனால் நாம் ஒரு தேசமாக நிற்கிறோம். இதை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் கடமை தவறி தப்பிக்க முடியாது. நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும், அப்போதுதான் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இருக்க முடியும்.” என்று தெரிவித்தனர்.. மேலும், குற்றவாளிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்..