உரிமைத்தொகை பெற்று கொண்டவர்களில் 8,833 பெயர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூ. 12,000 உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கும் தகுதியான பயனாளிகளைக் கண்டறிவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 1000 வீதம் முதல் தவணையாக அவர்களின் வங்கிக் கணக்கின் வாயிலாக செலுத்தப்பட்டது.
நடப்பு அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட வேண்டிய அக்டோபர் 15, அரசு விடுமுறை நாள் என்பதால், இத்திட்டத்தின் கீழ் பயனடையும் அனைத்து மகளிருக்கும், ஒரு நாள் முன்னதாகவே உரிமைத் தொகையினை அனுப்பி வைக்கத் தாயுள்ளத்தோடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுதியான பயனாளி ஒருவர்கூட விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கில், திருநங்கைகள் உள்ளிட்ட பல்வேறு தகுதியான குடும்பத் தலைவியர் கண்டறியப்பட்டு, அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். உரிமைத்தொகை பெற்று கொண்டவர்களில் இறந்து போனவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்ட 8,833 பெயர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.