வடிவேலு ஒரு திரைப்படத்தில் போலீஸிடம் மாட்டிக் கொள்ளாமலிருக்க திருடிவிட்டு மிளகாய் பொடியை தூவி விட்டு வருவார். அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்று இருக்கிறது. இந்த சம்பவத்தின் போது நகைக்கடையில் திருட முயன்ற இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வள்ளிநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து யுவர் தூத்துக்குடியில் உள்ள கார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். மாரிமுத்துவின் உறவினரான மார்த்தாண்டம் பட்டி கிராமத்தைச் சார்ந்த முத்துக்கிருஷ்ணன் தற்காலிகமாக சுகாதாரப் பணியாளராக கொசு மருந்து அடிக்கும் வேலை செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து விளாத்திகுளம் மதுரை ரோட்டில் அமைந்துள்ள ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான ராஜலட்சுமி ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் கேஸ் கட்டிங் மெஷினை பயன்படுத்தி ஷட்டரைத் திறந்து 13 சவரன் தங்க நகை 25 கிலோ மதிப்புள்ள வெள்ளி கொலுசுகள் 12,500 ரொக்க பணம் ஆகியவற்றுடன் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு 20 லட்சம் ரூபாய்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாட்ச்மேன் நள்ளிரவில் ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கு தகவல் கொடுக்கவே போலீசார் இவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் இருவரும் பல நாட்களாக திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. கடை அடைப்பதற்கு முன்பாகவே அதன் மாடிக்கு சென்று அங்கிருந்து திட்டம் போட்டு கடையடைத்த பின் கீழ் இறங்கி வந்து கேஸ் கட்டிங் மிஷினை வைத்து ஷட்டரை வெட்டி உள்ளிருந்து நகைகளை உள்ளே எடுத்து இருக்கின்றனர் மேலும் கடையிலிருந்து ஷட்டர் வரை நாய் மோப்பம் பிடிக்காமல் இருக்க மிளகாய் பொடியையும் தூங்கி உள்ளனர். இவை எல்லாவற்றையும் பக்காவாக செய்த திருடர்களில் ஒருவர் கால் இடறி விழுந்ததால் வாட்ச்மேன் கண்ணில் பட்டு காவல்துறையிடம் சிக்கியிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.