தினமும் ராசிபலன் கேட்காமல் ஜோதிடப் பலன்கள் பார்க்காமல் பலருக்கும் பொழுது விடிவதில்லை. இதனால் சினிமாவிற்கு இருக்கும் ரசிகர்கள் போலவே ஜோதிடர்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பிரபல ஜோதிடர்களுக்குப் போட்டியாக வந்திருக்கிறது AI ஜோதிடம்.
தற்போது https://kundligpt.com என்னும் இணைய தளம் AI தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இந்த தளத்தில் உங்களின் பிறந்த நேரம், நாள் மற்றும் பிறந்த இடம் பற்றிய தகவலைக் கொடுத்தால் AI உடனடியாக உங்கள் ஜாதகத்தைக் கணித்து பதில் அளிக்கிறது.
தற்போது ஏராளமானவர்கள் இந்தத் தளத்தில் பதிவு செய்து ஜோதிடம் கேட்டு வருகிறார்கள். இதில் சில பிரச்சனைகளும் உண்டு, ஒரே நேரத்தில் இணைய தளத்தைப் பலர் பார்வையிடுவதால் முறையாக சேவையை வழங்க படவில்லை. குறிப்பாக பிறந்த இடத்தைத் தேர்வு செய்யும் வரைபடக் கருவியை தொட்டால் அது தேவையற்ற புதிய பிரவுசர் விண்டோக்களை, பாப் அப்களைத் திறக்கிறது.
அப்படியே பிறந்த இடத்தைச் சரியாகக் குறிப்பிட்டுவிட்டாலும், “காத்திருங்கள் அல்லது join@kundligpt.com என்னும் முகவரிக்கு hi என்று அனுப்புங்கள், கூட்டம் குறைந்ததும் தொடர்பு கொள்கிறோம் என்று தெரிவிக்கிறது.” எனவே இந்த இணையதளத்தை அணுகுகிறவர்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இதுகுறித்து பிரபல ஜோதிடரிடம் கேட்டபோது, “ஒருகாலத்தில் பஞ்சாங்கம் பார்த்து ஜாதகங்கள் கணித்தோம். இன்று கம்பியூட்டரே ஜாதகம் கணித்துக் கொடுக்கிறது. AI தொழில்நுட்பத்தில் பதில்கள் பெறுவது அடுத்த கட்ட நகர்வு என்றுதான் பார்க்க வேண்டும். பல வாடிக்கையாளர்கள் ஜாதகத்தைக் கொடுக்கும் முன்பாகவே எனக்குள் சில விஷயங்கள், உள்ளுணர்வின் மூலம் புரிந்துகொள்ளமுடியும். ஆனால் AI சொல்லும் ஜோதிடத்தில் இந்த உள்ளுணர்வு நிச்சயம் மிஸ் ஆகும் என்று உறுதியாகச் சொல்லலாம். வாழ்க்கை குறித்த பெரிய பெரிய முடிவுகளை AI-ஐ கேட்டு எடுப்பது சரியல்ல என்றே தோன்றுகிறது” என்றார் ஜோதிடர்.