சென்னையில் உள்ள சாலையோர வியாபாரிகள் தங்களுக்கான அடையாள அட்டையை, வரும் 28ம் தேதி வரை பெறலாம்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில், சுமார் 35,000க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் பல்வேறுவிதமான வணிகங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் 20,000க்கும் அதிகமானோர் தள்ளுவண்டிகளில் சாலையோர உணவகங்களை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற கடைகளால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் பலர் அந்த சாலைகளை கடக்க மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்த நிலையில் பதிவு செய்யப்படாத சாலை ஓர கடைகளில் அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் தங்களுக்கான அடையாள அட்டையை, வரும் 28ம் தேதி வரை பெறலாம், என ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை மாநகராட்சியில், சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரம் மேம்படுத்துதல் மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டம், திட்டம் மற்றும் விதிகளை பின்பற்றி நகர விற்பனைக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக சிப் பொருத்திய கியூஆர் குறியீடு மற்றும் வெப் லிங் பயன்பாடுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்குவதற்கு நகர விற்பனை குழுவின் 9வது கூட்டம் கடந்த ஜன.24ம் தேதி நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள அடையாள அட்டைகளை பெறுவதற்கு ஜன.27 முதல் பிப்.15ம் தேதிவரை அந்தந்த மண்டலத்திற்குட்பட்ட வார்டு அலுவலகங்களில் வழங்க உத்தரவிடப்பட்டு, பிப்.13ம் தேதிவரை 4,253 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, இதுவரை மொத்தம் 24,573 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6,567 அடையாள அட்டைகள் வழங்க கடைசி வாய்ப்பாக மீண்டும் பிப்.16ம் தேதி முதல் 28ம் தேதிவரை அந்தந்த மண்டலத்திற்குட்பட்ட வார்டு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வியாபாரிகளுக்கான புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
மேலும், பிப்.28ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளாத சாலையோர வியாபாரிகளின் அடையாள அட்டைகள் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. எனவே, இந்த இறுதி வாய்ப்பினை சாலையோர வியாபாரிகள் பயன்படுத்தி பழைய அடையாள அட்டைகளை ஒப்படைத்து ஒடிபி வாயிலாக புதிய அடையாள அட்டைகளை அந்தந்த வார்டுகளில் பிப்.28ம் தேதி வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் அலுவலக வேலை நாட்களில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.