திருவண்ணாமலை மாவட்டம் தேன் பழனி நகரை சேர்ந்தவர் குருராஜன் மகன் ஸ்ரீவாசன் (34). இவர் பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த மாதம் 14ஆம் தேதி குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே தினமும் ரூ.10 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்ற விளம்பரம் வந்துள்ளது. இதையடுத்து, ஸ்ரீவாசன் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில், ஆன்லைன் வணிகம் மூலம் குறிப்பிட்ட பொருளை தேர்வு செய்து அதற்கான பணத்தை செலுத்தினால் அதற்கு ஈடாக கூடுதல் தொகை தங்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என குறிப்பிட்டு இருந்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு படி நிலையாக முன்னேறிய ஸ்ரீவாசன் அதற்காக ரூ.10 லட்சம் வரை பணத்தை செலுத்தியுள்ளார். ஒவ்வொரு முறை பணம் செலுத்தும் போதும் அதைவிட கூடுதல் தொகை அவரது செல்போன் கணக்கிற்கு வருவது போல குறுஞ்செய்தியும் வந்துள்ளது. எனவே, அவரது நம்பிக்கையும் அதிகமானது.
அதனை தொடர்ந்து வங்கி சேமிப்பு கணக்கில் பணத்தை செலுத்த வேண்டுமானால் அதற்கான வரி ரூ.4.50 லட்சம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையும் நம்பிய அவர் மொத்த பணத்தையும் ஆன்லைனில் செலுத்தியுள்ளார். ஆனால், குறிப்பிட்ட படி பணம் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. எனவே, மீண்டும் அந்த செயலியில் முயற்சி செய்துள்ளார். சேவை வரி சிக்கலால் தொகையை செலுத்த இயலாமல் கிடப்பில் இருப்பதாக செய்தி வந்துள்ளது. அந்த செயலியின் பணத்தை திரும்பப் பெற மேலும் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும் என அந்த செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார் ஸ்ரீ வாசன். ஆனால், எப்படியாவது இழந்த பணத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதற்காக அந்த ரூ.5 லட்சத்தையும் கடந்த மாதம் 31ஆம் தேதி செலுத்தியுள்ளார்.
பணம் செலுத்திய பின்னர், அந்த செயலி முழுமையாக செயலிழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீ வாசன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் செயலியில் முழுமையாக முயன்றுள்ளார். ஆனால், அதில் எவ்வித தகவல்களும் பரிமாற்றம் நடைபெறவில்லை. எனவே, அதிர்ச்சி அடைந்த ஸ்ரீவாசன் இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.