பொதுவாக எல்லோரும் தங்களுடைய பள்ளிப்பருவ காலங்களை நினைத்துப் பார்க்கும்போது பரவசமடைவார்கள். ஏனென்றால் அந்த பள்ளிப் பருவ காலத்தில் தான் தற்போதுள்ள எந்தவித பிரச்சனையும் தங்களுடைய மனதை பாதிக்காமல் இருந்ததாகவும் அவர்கள் கருதுவார்கள்.
இன்னும் சொல்லப்போனால் நாம் பள்ளி அல்லது கல்லூரிகளில் மாணவராகவே இறுதிவரையில் இருந்திருக்கலாமோ என்று நினைக்கும் மனிதர்களும் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு மாய உலகம் அந்த மாணவர் பருவத்தில் தான் கிடைக்கும். ஆனால் அந்த மாணவர் பருவத்தை விடுத்து சமூகத்தில் நுழையும்போது எல்லோரும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து அதிலிருந்து மீண்டு வர போராடுவது தான் மனித வாழ்க்கை.
அந்த வகையில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களில் முதல் கட்டமாக பள்ளிக்கு 25 மாணவர்களின் விவரங்களை கண்டறிந்து ஜூலை மாதம் 20ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை ஒரு புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
தமிழக அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களின் ஒருங்கிணைக்கும் முயற்சி தொடர்பாக அவர்கள் தொடர்ச்சியாக பள்ளியின் மீது ஈடுபாடும், பொறுப்பும் இருக்கின்ற நபர்களாக பயணம் செய்வது குறித்து குவி நோக்கு குழு கலந்துரையாடல் நடந்தது.
இதனை அடுத்து, அரசு பள்ளியின் நலம் மற்றும் பொறுப்புணர்வு கொண்ட 25 முன்னாள் மாணவர்களை வருகின்ற ஜூலை மாதம் 20ஆம் தேதிக்குள் கண்டறிய வேண்டும் என்றும் இந்த மாணவர்களின் தகவல்களை இணையதள பக்கத்தில் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
அதோடு அனைத்து அரசு பள்ளிகளிலும் ஜனவரி மாதத்தில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பை கொண்டாட திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக அரசு பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை பழைய மாணவர்களின் உதவியோடு பெற அரசு திட்டமிட்டு இருக்கிறது.