உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவாவில் நடந்த தற்கொலை சம்பவம், சமூகத்தில் ஆண்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. 33 வயதான பொறியாளர் மோஹித் யாதவ், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தரும் தொந்தரவுகளால் சோர்ந்து, தனது வாழ்க்கையை முடித்துகொண்டார்.
மரணத்திற்கு முன் பதிவு செய்த வீடியோவில் அவர், “என் மனைவி பிரியா மற்றும் அவருடைய குடும்பம் என் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து, சொத்துகளை பெயர்மாற்றம் செய்ய அழுத்தம் கொடுத்தனர். நான் மரணம் அடைந்த பிறகும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் என் அஸ்தியை சாக்கடையில் வீசுங்கள்” என கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் எட்டாவாவைச் சேர்ந்த மோஹித் யாதவ், சிமென்ட் நிறுவனத்தில் ஃபீல்ட் இன்ஜினியராக பணிபுரிந்தார். பிரியா என்பவரை 7 வருடங்களாக காதலித்து கடந்த 2023ம் ஆண்டு அவர் திருமணம் செய்துகொண்டார். இவர் கடந்த வியாழன் அன்று எட்டாவா ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள ஜாலி ஹோட்டலில் தங்கியிருந்தார். மறுநாள் காலையில் அவர் தனது அறையை விட்டு வெளியே வராததால் ஹோட்டல் ஊழியர் உள்ளே சென்று பார்த்தனர். தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த மோஹித்தை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மரணத்திற்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோ ஆதாரத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், “என் வீட்டையும் சொத்தையும் அவள் பெயரில் பதிவு செய்யாவிட்டால், என் குடும்பத்தை வரதட்சணை வழக்கில் சிக்க வைப்பேன் என்று எனது மனைவி மிரட்டுகிறாள். அவளுடைய தாய் மற்றும் தந்தை என் மீது பொய் புகார் அளித்தார்கள், அவளுடைய சகோதரர் என்னைக் கொலை செய்வதாக மிரட்டினார்” என குற்றம்சாட்டினார்.
வீடியோவின் முடிவில் தனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்ட மோஹித், ”இறந்த பிறகும் தனக்கு நீதி கிடைக்காவிட்டால், தனது அஸ்தியை சாக்கடையில் வீசுங்கள். ஆண்களுக்கு என ஒரு சட்டம் இருந்திருந்தால் நான் தற்கொலை முடிவை எடுத்திருக்க மாட்டேன். என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின் துன்புறுத்தலை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என தனது வீடியோவில் பேசியுள்ளார்.
இந்த சம்பவம், பெண்கள் தரப்பில் வரும் பொய்யான குற்றச்சாட்டுகள் ஆண்களின் உயிரையே பறிக்கும் அளவிற்கு சென்றுவிட்டது என்பதற்கான எதிரொலியாக பார்க்கப்படுகிறது. தற்போது சமூக ஆர்வலர்கள் மற்றும் உரிமை அமைப்புகள், ஆண்களுக்கு சட்ட பாதுகாப்பு வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.