Tirupati Laddu: திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் கலப்படம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு நான்கு பேரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் போலே பாபா பால் பண்ணையின் முன்னாள் இயக்குநர்கள் விபின் ஜெயின் மற்றும் போமில் ஜெயின், வைஷ்ணவி பால் பண்ணையின் அபூர்வ் சாவ்தா மற்றும் ஏ.ஆர் பால் பண்ணையின் ராஜு ராஜசேகரன் ஆகியோர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதாரங்களின்படி, சிறப்பு விசாரணையில் நெய் விநியோகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது, இதன் காரணமாகவே கைது நடவடிக்கை செய்யப்பட்டன. கோயிலுக்கு நெய் வழங்குவதற்காக வைஷ்ணவி பால்பண்ணை அதிகாரிகள் ஏ.ஆர். பால்பண்ணையின் பெயரில் டெண்டரைப் பெற்றதாகவும், டெண்டர் செயல்முறையை கையாள போலி பதிவுகளை உருவாக்குவதில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் வாரியத்தின் தேவையை பூர்த்தி செய்யும் திறன் போலே பாபா பால்பண்ணைக்கு இல்லை என்று அதிகாரிகள் கண்டறிந்த நிலையில், வைஷ்ணவி பால்பண்ணை போலே பாபா பால்பண்ணையிலிருந்து நெய் வாங்கியதாக பொய்யாகக் கூறியதாக சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
திருப்பதி லட்டு தயாரிப்பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, சிபிஐ கடந்த ஆண்டு நவம்பரில் ஐந்து பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. இந்தக் குழுவில் மத்திய நிறுவனத்தின் இரண்டு அதிகாரிகள், ஆந்திரப் பிரதேச காவல்துறையின் இரண்டு அதிகாரிகள் மற்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தின் (FSSAI) ஒரு அதிகாரி ஆகியோர் அடங்குவர்.
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் YSRCP (யுவஜன ஸ்ராமிக் ரைத்து காங்கிரஸ் கட்சி) மாநிலங்களவை உறுப்பினர் Y V சுப்பா ரெட்டி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், லட்டு தயாரிப்பதில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்திய குற்றச்சாட்டு SIT-யால் விசாரிக்கப்படும் என்றும், அது CBI இயக்குநரால் கண்காணிக்கப்படும் என்றும் கடந்த ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.
ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு செப்டம்பர் மாதம், மாநிலத்தில் முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசாங்கத்தின் போது திருப்பதி லட்டு தயாரிப்பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார். நாயுடுவின் இந்தக் கூற்று பெரிய அரசியல் சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.