தமிழகத்தில் விழாக்கள், பண்டிகைகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமுதாய தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயுதப்படை காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து டிஜேபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது; தமிழகத்தில் எதிர்வரும் நாட்களில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள் மற்றும் அரசியல், சாதி மற்றும் மதத் தலைவர்களின் பிறந்த நினைவு நாட்கள், தொடர்ந்து வரவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர், சாதி மற்றும் மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் பங்கேற்பதற்கு வாய்ப்புள்ளது. சமயங்களில் இருபிரிவினரிடையே மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால், தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியமாகிறது.
எனவே தமிழகத்தில் உள்ள ஆயுதப்படைகளில் எடுக்கப்பட வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகளாக மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படையில் உள்ள ஆளிநர்களுக்கும், சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் இளம் காவலர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று முறை காவல் நிலை ஆணைப்படியும் பயிற்சி கையேட்டினன் படியும், கவாத்து பயிற்சி வழங்க வேண்டும் இப்பயிற்சியை ஆயுதப்படையில் உள்ள உயர் அதிகாரிகள் (காவல் ஆய்வாளர்கள் மற்றும் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள்) கண்காணிக்கவும் கலந்து கொள்ளவும் அவர்களை அறிவுறுத்த வேண்டும்.
ஆயுதப்படையில் உள்ள துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு கலவர சம்பவங்களில் படையை வழிநடத்துவதற்கு அவ்வப்போது உரிய பயிற்சிகள் அளிக்க வேண்டும்.