12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8 மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.
12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதியுள்ளனர். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்துதல் பணிகளுக்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் விடைத்தாள்கள் மண்டல சேகரிப்பு மையங்களில் இருந்து தற்போது திருத்துதல் முகாம்களுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டன. விடைத்தாள் திருத்துதல் பணி இன்று தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி – ஆசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறை
விடைத்தாள் திருத்தும் பணியில் நியமனம் செய்யப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் மேல்நிலைக் கல்வி பாடங்களைப் போதித்தவராக இருத்தல் வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகத்தினால் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களை மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடுத்தக்கூடாது.
உதவித் தேர்வாளர்கள் நியமனத்தில் முகாம் அலுவலர்கள் கவனம் செலுத்தாத காரணத்தினால் முந்தைய ஆண்டுகளில் மறுமதிப்பீடு, மறுகூட்டலின்போது உயர்நீதி மன்றத்தில் அதிக வழக்குகளைத் தேர்வுத்துறை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. எனவே தகுதி வாய்ந்த அனைத்து ஆசிரியர்களையும் மதிப்பீட்டுப் பணிக்கு ஈடுபடுத்த வேண்டும். மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்படும் கணினி அறையில் அலைபேசியில் பேசுவதை முற்றிலும் தவிர்த்திடும் வகையில் முகாம் அலுவலர் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.