நிலவில் உறக்க நிலையில் இருக்கும் லேண்டர், ரோவரை விழிக்க வைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நிலவின் தென்துருவ பகுதிகளை ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் 3 விண்கலத்தினை அனுப்பிவைத்தனர். இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த மாதம் 23ம் தேதி வெற்றிகரமாக நிலவில் இறங்கியது. அதிலிருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று 14 நாட்கள் தனது ஆய்வு பணிகளை மேற்கொண்டது. இந்நிலையில் அடுத்த 14 நாட்களுக்கு நிலவில் சூரியஒளி இல்லாததால் நிலவின் தென்துருவத்தில் ரோவர் மற்றும் லேண்டர் கருவிகள் உறக்க நிலையில் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், நிலவில் சூரிய உதயம் இன்று நிகழ்கிறது. இதையொட்டி லேண்டர் மற்றும் ரோவர் இன்று உறக்க நிலையில் இருந்து எழுப்பப்பட்டு செயலாக்கத்துக்கு கொண்டுவரப்படவுள்ளது. சோலார் பேனல் ஒளியைப் பெற்று, பேட்டரி சார்ஜ் ஆகி, செயல்பாட்டிற்கு வரும், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், விக்ரம் லேண்டர், ரோவர் மீண்டும் விழித்தெழுந்தால் இன்னும் அதிக தரவுகள் கிடைக்கும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நிலவை பொருத்தவரையில் 14 நாட்கள் பகலாகவும், 14 நாட்கள் இரவாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன்படி, நிலவில் சூரிய ஒளி இல்லாத நாட்களில் வெப்பநிலையானது வெகுவாக குறைந்து மைனஸ் 253 டிகிரி வரையில் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலையால் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் முற்றிலுமாக உறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.