வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடற்கரை நோக்கி நகரும் என்றும், இதனால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாளை மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 17, 18) தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவலின் படி, நாளை (டிசம்பர் 17) கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல் தஞ்சை, திருச்சி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாளான 18ஆம் தேதி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், வரும் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை தொடரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More : இரவு நேரங்களில் மரத்தின் அடியில் தூங்கலாமா..? இனி இந்த தவறை பண்ணாதீங்க..!! பெரிய ஆபத்து வருமாம்..!!