சென்னையில் தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் விளையாட்டுப் போட்டியில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் கடந்த 21ஆம் தேதி மகாராஷ்டிர மாநில அணியைச் சேர்ந்த கேசவ் முடேல் என்பவர் தாக்கியதில் அருணாச்சலப் பிரதேச வீரர் யோரா டேட் என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தனக்கு மயக்கமாக வருவதாக அவர் தெரிவித்ததை அடுத்து உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். யோரா டேட்டுக்கு மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
முன்னதாக, மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்தை நிவாரணமாக யோரா டேட் குடும்பத்துக்கு வழங்கினார்.