பாலமேடு பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் மாட்டுப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு நேற்றைய தினத்தில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் அரவிந்த்ராஜ் என்ற இளைஞர் பங்கேற்றார்.
பாலமேட்டைச் சேர்ந்த இவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் ராஜேந்திரன், தெய்வானை தம்பதியின் மகனான அரவிந்தராஜ் கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான காளைகளை அடக்கி சிறந்த வீரராக வலம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட போட்டியில் வாடிவாசலில் காத்திருந்த அரவிந்தை, திடீரென வெளிவந்த காளை அவரின் வயிற்றில் குத்தி தூக்கி வீசியது. இதனால் பலத்த காயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. அத்துடன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஜல்லிக்கட்டில் உயிரிழந்த அரவிந்த்ராஜ் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வழங்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு எதிர்பாராத விதமாக நடந்த மகனின் இறப்பு குறித்து தாய் தெய்வானை கூறுகையில், இதோ வந்துவிடுவேன் அம்மா என்று கூறி சென்ற எனது மகன் இறந்துவிட்டான். திருமணத்திற்கு சரி என்று சொன்னவன் இன்று சடலமாக பார்க்கிறேனே என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.