60 வயதைக் கடந்த முதியவர்களுக்கு ரயில் பயணத்தில் அனைத்து கிளாஸ்களிலும் கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வந்தது. இதில், ஆண்களுக்கு 40%, 58 வயதை எட்டிய பெண்களுக்கு 50% என சலுகை வழங்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால், கடந்த 2020 மாா்ச் 20ஆம் தேதி இந்தக் கட்டணச் சலுகை திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட்டின் 2-ஆவது கூட்டத்தொடா் திங்கட்கிழமை தொடங்கியது. அப்போது, பாஜக எம்.பி. ராதா மோகன் சிங் தலைமையிலான ரயில்வே துறைக்கான நிலைக்குழு சாா்பில் மானியக் கோரிக்கைகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டன. அதில், முதியோருக்கான ரயில் பயணக் கட்டணச் சலுகை குறித்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து, நாடாளுமன்ற நிலைக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், ரயில்வே துறை அளித்த தகவல்களின்படி, கொரோனா பாதிப்பு குறைந்து, நாடு இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளது. கொரோனா தொற்றுக்கு முந்தைய காலங்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில் பயணக் கட்டணச் சலுகையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவது குறித்து ரயில்வே துறை மறுபரீசிலனை செய்ய வேண்டும். தேவைப்படும் முதியோர் பயன்பெறும் வகையில், குறைந்தபட்சம் 3ஏ வகுப்பு, படுக்கை வசதி கொண்ட வகுப்பு ஆகியவற்றில் இந்த நடைமுறையைக் கொண்டு வரலாம். நாடாளுமன்ற நிலைக்குழு தனது முந்தைய மானியக் கோரிக்கையிலும் இதே பரிந்துரையை வழங்கியிருந்தது. ஆனாலும், ரயில் பயணக் கட்டணச் சலுகை நடைமுறையைக் கொண்டு வருவது குறித்து எவ்வித திட்டமும் இல்லை. ஏற்கனவே, அனைத்து ரயில் பயணிகளுக்கும் 50-55 சதவீத பயணக் கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.