உடல் பருமனானவர்கள் சிரமமின்றி பயணிக்க புறநகர் பேருந்துகளில் 5 இருக்கைகள் குறைக்கப்பட்டுள்ளது என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களுக்கு அவ்வப்போது பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. பெண்களுக்கு கட்டணமில்லா சேவையை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அமல்படுத்தி வருகிறது. அதேபோல விவசாயிகள் தங்கள் சந்தைக்கு எடுத்துச் செல்லும் காய்கறிகளை பேருந்தில் கொண்டு செல்ல அனுமதி வழங்கியது. தொடர்ச்சியாக இப்படி பல்வேறு புதிய புதிய அறிவிப்புகளை தமிழக போக்குவரத்து கழகம் வழங்கி வருகிறது.
அந்த வகையில் உடல் பருமனானவர்கள் சிரமமின்றி பயணிக்க புறநகர் பேருந்துகளில் 5 இருக்கைகள் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்து கழகத்தினால் இயக்கப்படும் புறநகர் பேருந்துகள், போதிய இடைவெளியின்றி பயணிகள் பயணிக்க சிரமமாக உள்ளது. இதன்காரணமாக, உடல் பருமானான பயணிகள் புறநகர் பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிப்பது மிகுந்த சிரமத்தையும், உடல் அசதியையும் ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில் புறநகர் பேருந்துகளில் உடல் பருமனானவர்கள் இலகுவாக பயணிக்க பேருந்துகளில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதற்காக ஒவ்வொரு பேருந்துகளிலும், 5 இருக்கைகள் குறைக்கப்படும் என்றும், விரைவில் 4,000 புதிய பேருந்து வாங்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். போக்குவரத்துத்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு பயணிகள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.