திரிஷா நடிப்பில் வெளியாகவுள்ள ராங்கி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, நடிப்பில் தயாராகி உள்ள திரைப்படம் ‘ராங்கி’. இந்த படத்தில் திரிஷாவுடன் இணைந்து அனஸ்வர ராஜன், ஜான் மகேந்திரன், லிசி ஆண்டனி, கோபி கண்ணதாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் “ராங்கி” படத்தை இயக்குனர் எம். சரவணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட போது படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தில் நிறைய சர்ச்சை காட்சிகள் இருப்பதாக கூறி படத்திற்கு அனுமதி வழங்க மறுத்தனர். மேலும் படத்தை மேல்முறையீட்டு குழுவிற்கு கொண்டு சென்று அங்கு குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால் மட்டுமே அனுமதி தர முடியும் என தெரிவித்தனர். இதனையடுத்து 25க்கும் மேற்பட்ட காட்சிகளை நீக்கிய பிறகு தணிக்கை குழு யுஏ சான்றிதழை வழங்கியதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் ராங்கி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சோசியல் மீடியாவில் பலராலும் பகிரப்பட்டுவருகிறது. இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.