Trump threat: அமெரிக்க டாலருக்குப் பதிலாக புதிய கரன்சியை உருவாக்கினால், 100% வரி விதிக்கப்படும் என்றும், அவை அமெரிக்க சந்தையில் இருந்து விலக்கப்படும் என்றும், பிரிக்ஸ் நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்க டாலரை மாற்ற முடியாது என்பதை பிரிக்ஸ் நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று மிரட்டல் தொனியில் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க டாலருக்குப் பதிலாக புதிய கரன்சியை உருவாக்கினால், இந்தியா, சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் மீது அமெரிக்கா 100 சதவீதம் வரி விதிக்கும். அமெரிக்க டாலருக்கு சவால் விடும் வகையில் பிரிக்ஸ் தனது சொந்த நாணயத்தைத் தொடங்கினால், அவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக ஊடக தளமான Truth Social இல் பதிவிட்டுள்ளதாவது, BRICS நாடுகள் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை சவால் செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இதை நாங்கள் அமைதியாக பார்க்க மாட்டோம். BRICS புதிய கரன்சியை உருவாக்கினால் அல்லது வேறு எந்த கரன்சியையும் ஆதரித்தால், அதன் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும். இது நடந்தால், பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க சந்தையில் இருந்து விலக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா பார்வையாளராக இருக்காது என்றும், இந்த அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.