கோவை அருகே அதிகாலையில் டீ குடிக்க சென்ற இரண்டு மாணவர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர்கள் ஜோசப் மற்றும் சல்மான். நண்பர்களான இவர்கள் இருவரும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சார்ந்தவர்கள். கல்லூரி விடுதியில் தங்காமல் தனியாக அறை எடுத்து தங்கயிருந்து படித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் அதிகாலை இரண்டு மணிக்கு மலுமிச்சம்பட்டிக்கு டீ குடிப்பதற்காக தங்களது சொகுசு பைக்கில் வேகமாக சென்றுள்ளனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த இவர்களது வாகனம் சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக மதுக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இறந்த இரண்டு மாணவர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பைக் விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்காலங்களில் விலையுயர்ந்த பைக்குகளை வைத்துக்கொண்டு வேகமாக சென்று இளைஞர்களும் மாணவர்களும் சாலை விபத்துகளில் பலியாவது பெற்றோர் மற்றும் யாவருக்கும் மிகுந்த மனவேதனையை அளிக்க கூடியதாக இருக்கிறது.