கர்நாடகாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான ஹம்பியில், அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, நான்கு சுற்றுலாப் பயணிகளும் அவர்கள் தங்கியிருந்த ஹோம்ஸ்டேயின் பெண் மேலாளரும் சனபூர் ஏரிக்கு அருகில் இசை வாசித்து மகிழ்ந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
இரவில் சுற்றிப் பார்க்க வெளியே சென்ற 27 வயது இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர் என இரண்டு பெண்களை அந்த பகுதியில் சுற்றிய மூன்று ஆண்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.. இரவு 11:30 மணியளவில் கொப்பலில் உள்ள ஒரு கால்வாய் அருகே சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் நடந்த போது அந்த இரு பெண்களுடன் மேலும் 3 ஆண் சுற்றுலாப் பயணிகளும் இருந்துள்ளனர். இருப்பினும், அவர்களைக் கால்வாயில் தள்ளிவிட்டு, பெண்களைப் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல். மற்ற இருவரும் மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.
இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறப்பு போலீஸ் குழு தேடி வருகிறது. குற்றம் நடந்த இடம் ஹம்பியிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கங்காவதி கிராமப்புற காவல் நிலையத்தில் இந்திய நீதித்துறைச் சட்டத்தின் (BNS) பிரிவுகள் 309 (6) (திருட்டு அல்லது மிரட்டி பணம் பறித்தல்), 311 (மரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கொள்ளை), 64 (கற்பழிப்பு), 70 (1) (கும்பல் பாலியல் வன்கொடுமை), 109 (கொலை முயற்சி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.