திருமாவளவன் ஒட்டுமொத்த பட்டியலின மக்களுக்கான தலைவரோ, தமிழ் சமுதாயத்தின் தலைவரோ அல்ல என மத்திய இணை அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”சத்தீஸ்கரில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை பாஜக முதலமைச்சராக்கியுள்ளது. அதேபோல ராஜஸ்தான், மத்தியப்பிரேசத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை துணை முதலமைச்சராக்கியுள்ளோம். வாய்ப்புள்ள இடங்களில் பாஜக தலித், பட்டியலின மக்களுக்கு அதிகாரம் வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சராக இருப்பதில் கூட 3-வது இடத்தில் தான் உள்ளனர். தமிழ்நாட்டில் 3 பட்டியலின அமைச்சர்கள் உள்ளனர். புரோட்டோகால் அடிப்படையில் அவர்கள் கடைசியில் இருந்து 3-வது இடத்தில் உள்ளனர். தமிழ்நாட்டில் தலித் மக்களின் நிலை இதுதான். திருமாவளவன் குறிப்பிட்ட சமுதாயத்தின் தலைவராகத்தான் தன்னுடைய கருத்துகளை கூறி வருகிறார். 3% இடஒதுக்கீடு விவகாரத்தில் கூட அவரின் கருத்து அவர் ஒட்டு மொத்த தலித் மக்களின் தலைவராக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
திமுகவினர் அரசியலுக்காக மட்டுமே மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறி வருகின்றனர். அப்படி கூறுவதால் நாங்கள் ஒன்றும் குறைந்துவிட போவதில்லை. நாங்கள் இன்னும் வளர்ந்து கொண்டே தான் இருக்கப் போகிறோம். அவர்கள் ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபட முன்வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.