இஸ்ரேல் – ஈரான் மோதலை தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் பொருளாதார தடை விதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது.
கடந்த வாரம் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதனைத்தொடர்ந்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பொருளாதார தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ஈரான் மீது கூடுதல் பொருளாதார தடைகளும் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை ஜி7 அமைப்பில் உள்ள நாடுகளும் பின்பற்றும் என எதிர்பார்ப்பதாகவும், ஈரான் தாக்குதலை சிதைக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்புகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.