தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைக்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் அதிநவீன படப்பிடிப்பு தளங்கள் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும். சென்னை அருகே அதிநவீன திரைப்பட நகரம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிலும் மாணவர்களின் குறும் படப்பிடிப்பு தயாரிப்பு செலவுகள் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் தலைமையிட பயன்பாட்டிற்கென கணினி, மடி கணினி அச்சுப்பொறி நகல் எடுக்கும் இயந்திரம் ஆகியவை 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புனரமைப்பு பணிகள் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த அளவில் மேற்கொள்ளப்படும். டாக்டர் சி. நடேசனார், சர்.பி டி தியாகராயர், டாக்டர் டி.எம் நாயர் ஆகியோரின் சிறப்புகள் பெருமைகளை எதிர்கால தலைமுறையினர் அறியும் வகையில் திராவிட இயக்க சரித்திர நிகழ்வுகளை தாங்கி ஒரு வரலாற்றுச் சின்னம் அமைகின்ற அளவிற்கு திராவிட இயக்க வீரர்கள் கூட்டம் தலைநகர் சென்னையில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

மேலும் மாமன்னர் பூலித்தேவர் படையின் முக்கிய தளபதியாக இருந்தவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான வெண்ணி காலாடியின் நினைவைப் போற்றும் வகையில் தென்காசி மாவட்டம் விஸ்வநாதப்பேரியில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் திருவருட்சிலை அமைக்கப்படும். சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை வேலுநாச்சியாருக்கு பெருந்துணையாக நின்ற வீராங்கனை குயிலிக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை அமைக்கப்படும்.
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பில் திருவுருவச் சிலை அமைக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலம் அவர்களது பிறந்த நாளான ஜூன் 10 அன்று அரசு விழாவாக கொண்டாடப்படும். ஈரோடு மாவட்டம், சென்னி மலையை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் அவர்களுக்கு சென்னிமலையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.