சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ விரிவாக்கத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்ள மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் மக்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. மெட்ரோ ரயில் அமைப்பு சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இது சென்னை மெட்ரோ ரயில் நகரத்தின் பல்வேறு பகுதிகளை இணைப்பதால், மக்கள் சென்னை முழுவதும் எளிதாகப் பயணிக்க முடியும். மேலும், பயண நேரத்தை கணிசமாகக் குறைத்து, தினசரி பயணிகளுக்கு வசதியான தேர்வாக மெட்ரோ ரயில் உள்ளது.
போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாட்டைக் குறைப்பதன் மூலம் மெட்ரோ ரயில் சென்னை மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகிறது. அதேபோல், மெட்ரோ ரயில் கட்டுமான கட்டத்திலும் அதன் தொடர்ச்சியான செயல்பாடுகளிலும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேசமயம், மெட்ரோவில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சிசிடிவி கேமராக்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் அவசரகால பதில் அமைப்புகள் உள்ளன.
இந்நிலையில் தான், சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ விரிவாக்கத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்ள மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. மொத்தமாக 15.46 கிலோ மீட்டர் தூரத்துக்கு வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் மூலமாக நேரடியாக கிளாம்பாக்கம் வரையிலுமே செல்ல முடியும்.
இந்த விரிவாக்கத்துக்கான திட்ட அறிக்கையை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது. தற்போது, இதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. மேலும், விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யவும், மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவதற்கான பணிகளை மேற்கொள்ளவும் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் 13 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.