நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் பிரபல நடிகரின் மகன் உறுப்பினராக சேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த மாதத் தொடக்கத்தில் தனது அரசியல் கட்சியை அறிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனக் கூறிய அவர், வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலே இலக்கு என சுட்டிக்காட்டினார். இதனை ஒட்டியே, அரசியல் செயல்பாடுகளை நகர்த்தி வருகிறார் விஜய். இந்நிலையில், புதிதாக உறுப்பினர் சேர்ப்பு அணியை அறிவித்த விஜய், அதற்கு நிர்வாகிகளையும் நியமித்தார்.
மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தி கட்சியின் உறுப்பினர் சேர்க்கை கடந்த 8ஆம் தேதி செயலி மூலம் தொடங்கியது. 3 நாட்களில் சுமார் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக அந்த அணி நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர் மகன் நூருல் ஹசன் ஃபைசல் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இணைந்துள்ளார்.
சைவம் திரைப்படத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் பணியாற்றிய பைசல், 2014ஆம் ஆண்டு சென்னை ஈசிஆரில் நடந்த கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதன்பிறகு மூளையின் செயல்திறன் பாதிக்கப்பட்டு வீல் சேரில் முடங்கியப் பைசலுக்கு, நடிகர் விஜய் என்றால் உயிர் என்று சொல்லும் அளவுக்கு அவரது தீவிர ரசிகராக இருந்தார். தன் மீது பைசல் வைத்துள்ள அன்பை அறிந்த விஜய், சர்ப்ரைசாக ஒருநாள் அவரை சந்தித்து மகிழ்ச்சிப்படுத்தினார்.
இந்நிலையில், பைசல் விஜய் கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளார். உறுப்பினர் அட்டையை நாசர் மனைவி கமீலா நாசர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.