தமிழ்நாட்டின் அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்துபவராக உருவெடுத்திருப்பவர் நடிகர் விஜய். விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் இவரின் பேச்சு அரசியல் தலைவர்கள் மத்தியில் ஆதரவையும், எதிர்ப்பையும் உண்டாக்கியுள்ளது.
மாநாட்டை தொடர்ந்து 2026 தேர்தலை எதிர்கொள்ள தவெக தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக்கழகத்தை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி உள்ளார். இதற்கிடையே, டிசம்பர் 27ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கான பயண விவர தயாரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கி, நெல்லையில் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தான், தவெக நிர்வாகிகளின் அவசர கூட்டம் பனையூரில் நாளை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக மாநாடு, அரசியல் கட்சிகளின் விமர்சனம், சுற்றுப்பயணம், திருமாவளவனுடனான சந்திப்பு உள்ளிட்டவைகள் குறித்து நிர்வாகிகளுடன் விஜய் கலந்தாலோசிக்க உள்ளார். விஜய்யை திமுக, விசிக, நாம் தமிழர் கட்சி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அதற்கு தக்க பதிலடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.