”அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில ஜோடி எப்போதுமே ரசிகர்களுக்கு ஃபேவரிட் ஆக இருக்கும். அந்த வகையில், கமல் – ஸ்ரீதேவி, ரஜினி – ஸ்ரீப்ரியா, விஜய் – சிம்ரன் தான். இவர்கள் இணைந்து நடித்த அனைத்து படமுமே சூப்பர் ஹிட் படங்கள் தான். விஜய்யும்ம் சிம்ரனும் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்த படம் என்றால், அது ஒன்ஸ்மோர் தான். அதற்கடுத்து நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயா உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்நிலையில் தான், சசிகுமார், சிம்ரன், பக்ஸ் பகவதி பெருமாள் உள்ளிட்டோர் பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலையும் பெற்று வரும் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. அழுத்தம் திருத்தமான கதை இருந்தால் ரசிகர்கள் வெற்றியைக் கொடுப்பார்கள் என்பதற்கு டூரிஸ்ட் ஃபேமிலி படமும் ஒரு உதாரணம்.
இந்நிலையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடிகை சிம்ரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெற்றி அடைந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் உள்ளது. என்னுடைய 30 ஆண்டு சினிமா வாழ்க்கையில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் சிறந்த படமாக உள்ளது.
பெண் கதாநாயகி கொண்ட படங்களில் நல்ல கதையம்சம் கொண்டதாக இருந்தால் நடிப்பேன். அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உள்ள நிலையில், எல்லாம் சரியாக போய் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், மனித நேயம் ஜெயிக்க வேண்டும்.
80ஆம் ஆண்டுகளில் இருந்த கதாநாயகிகள் தற்போது மீண்டும் சினிமாவிற்கு வருவது நல்லதுதானே. பத்ம பூஷன் விருது பெற்ற அஜித் குமாருக்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார். மேலும், விஜய்யின் அரசியல் பயணம் தொடர்பான கேள்விக்கு, ”விஜய் அரசியல் தொடர்பான கேள்வியை தவிர்த்துக் கொள்ளுங்கள். சரியான நேரம் வரும் போது நானே சொல்கிறேன்” என்று பதில் அளித்தார்.