Pakistan Violence: கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். 600 மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில், பஞ்சாப் மாகாணத்தின் லாகூரில் கல்லுாரி மாணவி ஒருவரை, அக்கல்லுாரியின் காவலாளி பாலியல் பலாத்காரம் செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது, மாணவர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாகாணம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ‘இதற்கிடையே, கல்லுாரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பரவும் தகவல் வதந்தி என, மாகாண முதல்வர் மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கோரிக்கையை ஏற்க மறுத்த மாணவர் அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் இது வன்முறையாக மாறியது. அப்போது போலீசார் நடத்திய தடியடியில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இதற்கிடையே, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பொதுமக்கள் ஒன்றுகூடவும் மாகாண அரசு தடை விதித்துள்ளது.
மாணவர்களின் தொடர் போராட்டம் எதிரொலி காரணமாக, பஞ்சாப் மாகாணம் முழுதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. வங்கதேசத்தில், சமீபத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக, ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: காட்டு யானைகள் மீது மோதிய ரயில் தடம் புரண்டு விபத்து..!! 2 யானைகள் பலி..