இஸ்ரேல் -ஹமாஸ் போர், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இந்த போரை நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்கு பகுதி மீது தரை, கடல், வான் வழியாக தாக்குதல் நடத்தினர். அன்றைய தினம் இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. சுமார் 1,200 ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் நுழைந்து ஏராளமான இஸ்ரேலியர்களை சுட்டுக்கொன்றனர். பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து போர் நடக்கும் சூழலில் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 2,808 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,859 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல், நள்ளிரவில் காசாவில் உள்ள அஹ்லி அரபு மருத்துவமனையைத் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு 500 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் -ஹமாஸ் போர் தீவிரம் அடைந்ததை குறித்து முதல்வர் ஸ்டாலின், போர் என்பதே கொடூரமானது, இஸ்ரேல் -ஹமாஸ் போர், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இந்த போரை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலினின் பதிவில், “போர் என்பதே கொடூரமானது! அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான். கடந்த பத்து நாட்களாக காசா பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. உயிருக்குப் பயந்து இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், கடும் காயமடைந்த குழந்தைகளின் அழுகுரலும், குடிநீர் – உணவின்றித் தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளன.
போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள். மனிதம் மரத்துப் போய்விட்டதா?. உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது. ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.