Viral Fever: பருவநிலை மாற்றத்தால் குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதையடுத்து, பருவமழை தொடங்கியதையடுத்து, சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. ஆனால், பருவ காலங்கள் மாறும் போது, இன்ப்ளூயன்ஸா, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள், டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் பரவலாக காணப்படும்.
இதனால், குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவர்களிடையே காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பலருக்கு ரத்த பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. எந்த வகை வைரஸ், பாக்டீரியா தொற்றாக இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால், பாதிப்பின் தீவிரத்தை குறைக்கலாம்.
அந்தவகையில், தமிழகத்தில் சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன், மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு வரும் குழந்தைகள் மற்றும் சிறார்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. சாதாரணமாக ஒரு கிளினிக்கிற்கு 15 பேர் வந்த நிலையில், தற்போது 50 பேர் வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு, குளிர் மற்றும் மழைக்காலங்களில் பரவக்கூடிய வைரஸ், பாக்டீரியா தொற்றுகள் காரணமாக உள்ளன. பள்ளிகள் வாயிலாகவும், மாணவர்களிடையே தொற்றுகள் பரவல் அதிகரித்துள்ளது.
இந்த பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளவது அவசியமாக உள்ளது. எனவே, தனிநபர் சுகாதாரம் மிகவும் முக்கியமானது. வயிற்றுப்போக்கு, காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால், உடலில் நீர்ச்சத்து குறைவதை தடுக்க, அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும். அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால், பாதிப்பின் தீவிர தன்மையை கட்டுப்படுத்துவதுடன், மற்றவர்களுக்கும் நோய் பரவாமல் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Readmore: கிரெடிட் கார்டு கடனால் தவித்து வருகிறீர்களா..? இதை செய்தால் ஈசியா தப்பிக்கலாம்..!!