நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் 2 வாரங்களாகியும் இன்னும் துப்பு துலங்கவில்லை. அவர் எழுதியதாகக் கூறப்படும் 2 கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் உள்பட 32 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பான வழக்கு ஒருவாரத்தை கடந்தும் இன்னும் மர்மம் விளங்கவில்லை. மேலும் ஜெயக்குமார் எழுதியதாகக் கூறப்படும் முதல் கடிதத்தில் சபாநாயகர் அப்பாவு பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் சொல்லப்படுகிறது. மேலும் அவரிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என ஐ.ஜி. கண்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கொலையா தற்கொலையா என உறுதியாக சொல்ல முடியவில்லை என காவல் துறை உயரதிகாரி ஐஜி கண்ணன் கூறியிருந்தாரே என நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை , “ஜெயக்குமார் மரணத்தை எப்படி தற்கொலை என சொல்ல முடியும், எங்களை பொருத்தமட்டில் அது கொலைதான். உலகில் எங்காவது கை, கால்களை கட்டிக் கொண்டு யாராவது தற்கொலை செய்து கொள்வார்களா? காவல் துறை அதிகாரியின் பேட்டியை நானும் கேட்டேன். அவர் சொன்னது ஜெயக்குமார் தனசிங்கின் மரணத்தில் எந்த தடயமும் கிடைக்கவில்லை என்பதுதான். அதாவது scientific evidence கிடைக்கவில்லை என்பதைதான் அவர் சொன்னார்.
இன்னும் ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை வரவில்லை என்றும் அந்த அதிகாரி கூறியிருந்தார் என செல்வப்பெருந்தகை தெரிவித்தார். சபாநாயகர் அப்பாவுவையும் விசாரிப்பதாக ஐஜி கண்ணன் சொல்லியிருந்தாரே அது குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்ட போது செல்வப்பெருந்தகை கூறுகையில், புலன் விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது. நாம் அதில் எந்த கருத்தையும் சொல்லக் கூடாது. அது விசாரணையின் முன்னேற்றத்திற்கு குந்தகம் விளைவிக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், இறந்த உடல் ஜெயக்குமாரின் உடலே இல்லை என சொல்கிறார்களே , அது குறித்து உங்கள் கருத்து என்ன என நிருபர்கள் கேட்டனர். அதற்கு “இதுவரை அப்படியாருமே அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை” என்று தெரிவித்தார். மேலும் ஜெயக்குமார் மரணம் குறித்து கண்டறிய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை வேறு சம்பவங்களுக்கு இத்தனை படைகள் அமைத்ததாக தெரியவில்லை. ஒரு விசாரணையின் போது நாம் மூக்கை நுழைக்கக் கூடாது. தமிழக காவல் துறையை நம்புகிறோம். திறமையானவர்கள். அதில் மாற்று கருத்தே இல்லை. முழுமையான உடற்கூராய்வு அறிக்கை வந்தால்தான் ஒரு தெளிவு வரும். இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Read More: இஸ்ரேல் தாக்குதல் ; முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி உயிரிழப்பு..!