fbpx

நாகூர் தர்கா வரலாறு அறிவோம்.. திருவிழாக்களில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்கின்றனர்.!

தமிழ்நாட்டில் நாகப்பட்டிணம் மாவட்டத்தில், காரைக்காலில் இருந்து தெற்கு நோக்கி 13 கி.மீ தொலைவில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நாகூர் தர்கா அமைந்துள்ளது. இது, இந்தியாவிலேயே முஸ்லீம் மக்களின் மிகப்பெரிய புனித தலமாக விளங்குகிறது.
அற்புதங்கள் நிகழ்த்தி அகிலத்தை ஆளும் இறை நேசர்களில் நம்முள் என்றும் பிரியமானவர் நாகூரில் அடங்கியிருக்கும் ஞானப்பேரொளி சையது அப்துல் காதிர் ஷாஹல் ஹமீது ஒலியுல்லாஹ்(ரலி). அவரது வாழ்க்கை வரலாற்றை பார்க்கலாம்.

முஹம்மது நபியின் வழித்தோன்றல் சையிது ஹஸன் குத்தூஸ் என்பவருக்கும், நபியின் மருமகன் அலி(ரலி) அவர்களின் வழித்தோன்றலான சையித் ஹமீதுத்தீன் மகளுமான அன்னை பாத்திமாவுக்கும் மகனாக சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன் இந்தியாவின் மாணிக்கப்பூர் நகரில் பிறந்தவர் தான் ஷாஹ¨ல் ஹமீது ஒலியுல்லாஹ்.

இறைத்தூதர் ஹிலுரு(அலை) அவர்கள் ஷாஹல் ஹமீதின் பிறப்பு குறித்து அன்னை பாத்திமாவுக்கு அறிவித்தார்கள். மூன்று மாத கருவாக இருந்தபோதே தனது அற்புதத்தை நிகழ்த்திவிட்டார், ஷாஹல் ஹமீது நாயகம். உடல்நலக் குறைவாக இருந்த தனது தந்தை நலம் பெறுவார் என்று தாயின் கருவறையில் குரல் எழுப்ப அவ்வாறே தந்தை குணமடைந்தார்.

ஆறுமாதக் கருவாக இருந்தபொழுது தனது தாயார் தொழுகைக்காக ஒழுச் செய்ய கிணற்றுள் விழுந்த பாத்திரத்தை தண்ணீரோடு தாயின் காலடியில் இருக்க வைத்தார். கருவறையில் இருந்தபடியே மேலும் இரண்டு அதிசயங்களை நிகழ்த்திய ஹாஹல் ஹமீது , ஹிஜ்ரி 910ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் மாதம் பத்தாம் நாள் வியாழன் மாலை வெள்ளிக்கிழமை இரவில் இப்புவியில் ஜனனம் செய்தார்.

நாயகம் பிறந்ததும் ஹிலுரு(அலை) மற்றும் இல்யாஸ் நபிகள் அந்த அறையில் தோன்றினார். ஹிலுரு(அலை) குழந்தையை கையில் எடுத்து பாங்கு சொன்னார்கள். இல்யாஸ் நபி ‘சையது அப்துல் காதிர்’ எனப் பெயர் சூட்டிவிட்டு தாய்க்கருகில் கிடத்திவிட்டு மறைந்தார்கள்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த ஷாஹல் ஹமீது நாயகம் சிறுவயதிலேயே நோன்பு நோற்பது, கேட்பவர் மெய் மறக்கும் நிலையில் திருமறையை இசையுடன் ஒதுவது, மார்க்க கடமைகளை முறையாக கடைப்பிடிப்பது என்று பக்தியில் திளைத்து வந்தார்கள். குர்ஆன், தப்ஸீர், ஹதீஸ், ஃபிக்ஹ ஆகிய மார்க்கக் கல்விகளையும் சரித்திரம், பூகோளம், கணிதம், தத்துவம், தர்க்கம், வானசாஸ்திரம் ஆகிய லௌகீகக் கல்விகளையும் பதினெட்டு வயது நிரம்புவதற்குள் கற்று முடித்தார்கள்.

இடையிடையே ஹிலுறு(அலை) அவர்களும் சிறுவன் முன் தோன்றி வேதத்தை தெளிவாக்கி வைத்தாகள். வாலிப பருவம் அடைந்தது ஷாஹ¨ல் ஹமீது அவர்கள் தங்களுக்கான ஞானகுருவைத் தேடி ஹிஜ்ரி 928ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் மாதம் ஒரு திங்கட்கிழமை வழித்துணையின்றி,கைச்செலவுக்குப் பொருள் இன்றி, துறவுக்கோலத்துடன் குவாலியர் பட்டணத்துக்கு விரைந்தார்.

நடை பயணமாக காடுகளை கடந்து வந்து கொண்டிருந்த நாயகத்தை திருடர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் நெருங்கினார்கள். அவரிடம் பொருள் இல்லாததால் நாயகத்தை கொலைசெய்யக் கருதி ஆயுதங்களால் வெட்டியவர்கள் தங்கள் உடல்களே துண்டாகி விழுந்தனர். கொள்ளையர்களின் உறவினர்கள் மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து அவர்களின் உடலை ஒட்டி, உயிர் கொடுத்து அற்புதம் நிகழ்த்தினார்.

அப்போது மலைவழியாக வரும்போது ஆதிபிதா ஆதம் (அலை), ஹவ்வா(அலை) நாயகத்துக்கு ரிக்வத் எனப்படும் திருவோடு போன்றதொரு பாத்திரத்தை வழங்கினார்கள். தேவைப்படும் போது தேவைப்பட்ட உணவை இதனின்று பெற்றுக் கொள்ளலாம். ஊர்தோறும் மக்களுக்கு உபதேசித்தும், உண்மையைப் பேணச் செய்து இஸ்லாத்தை நிலை நாட்டிக் கொண்டே நாயகம் அவர்கள் மாணிக்கப்பூர் வந்தடைந்தனர்.

அங்கு கொஞ்ச காலம் இருந்தவர்கள் வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்வதை தடை செய்தவர்களாக சீடர்களுடன் லாகூர் சென்றார். அங்கு இறைவனின் ஆணைப்படி காழி நூருத்தீன் முஃப்தி என்பவரின் மனைவி ஜஹாரா பீபிக்கு தான் மென்ற வெற்றிலை தாம்பூலத்தை கொடுத்து அவரை கருவுறச் செய்தார்.

அவர் பெறப்போகும் முதல் குழந்தைக்கு ‘முஹம்மது யூசுஃப்’ என பெயரிட நூருத்தினிடம் தெரிவித்ததோடு குழந்தையின் தன்மை குறித்தும் தெரிவித்த நாயகம் தன் சீடர்களுடம் பயணத்தை தொடர்ந்தார். மேற்கு, தென்மேற்கு ஆசிய நாடு நகரங்களைச் சுற்றிக்கொண்டு துர்க்கி தேசத்தினுள் புகுந்த  நாயகம், கர்ஸான என்ற பட்டணத்தை அடுத்துள்ள மலையில் நாற்பது நாட்கள் தனித்து சில்லா இருந்தார்கள்.

நாயகம் நிகழ்த்திய அதிசயத்துக்கு பரிசாக இபுனு ரவூஃப் தனது கப்பலை நாயகத்துக்கு சொந்தமாக்கி பத்திரம் கொடுக்க, அதை தன்னிடம் வந்து யாசித்தவனுக்கு கொடுத்துவிட்டு கஃபாவை நோக்கி நடந்தார்கள். நாயகம் அவர்கள் தங்களின் 37ம் வயதில் ஜித்தா துறைமுகத்திலிருந்து கப்பல் ஏறி கேரளாவின் பொன்னாணி எனும் ஊரில் கரையிறங்கினார்கள்.

அப்போது நாயகத்துடன் அவரது மகன் யூசுஃப் ஆண்டகையும் இருந்தார்கள். பின்னர் அங்கிருந்து லட்சத்தீவுகள், சிலோன் முதலிய வெளிநாடுகளுக்கும் காயல்பட்டணம், நத்தம், மேலப்பாளையம் போன்ற பகுதிகளுக்கும் சென்று இறைப்பிரசங்கம் செய்தவர் தஞ்சாவூரை அடைந்தார். அதை ஆட்சி செய்த அச்சுதப்ப நாயக்கர்  உடல்நலம் குன்றியிருந்தார்.

நாயகத்தின் சிறப்புகள் தெரிந்து அவரைக் கண்டு நோய் நீங்கப்பட்ட மன்னன், அதற்கு வெகுமதியாக நிலங்களைக் கொடுத்தார். அந்த இடத்தின் பகுதியில் தான் தர்காவும், அதைச் சேர்ந்த குளம் முதலிய கட்டிடங்களும் அமைந்துள்ளன. ஷாஹ¨ல் ஹமீது நாயகம் அவர்கள் நாஹ¨ரில் இருபத்தெட்டு வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அற்புதங்கள் பல நிகழ்த்திய நாகூர் நாதர் ஹிஜ்ரி 978ம் வருஷம் ஜமாதுல் ஆகிர் மாதம் பத்தாம் நாள் வெள்ளிக்கிழமை இரவு புகழுடம்பு எய்தினார்கள்.

நாகூர் நாயகம் மறைந்ததும் அவரது புதல்வர் தனது மனைவி, மக்களுடன் அங்கு குடித்தனம் நடத்தி வந்தார். அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இவர்களுக்கு ஆதரவாக இருந்ததோடு நாயகத்தின் கஃப்ரை சுற்றி பலகையால் பள்ளி போல் அடைத்தார்கள். அந்தப்பள்ளியே இன்று அழகிய ஐந்து மினாராக்களை( கோபுரம்) உடையதாய் விளங்குகிறது.

நாகூர் தர்கா ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது. சக்கரவர்த்தி சுல்தான் துல்கர்னைன் கட்டிய முதுபக்கு. இந்த ஸ்தலத்தில் தான் நாயகம் மரணித்தார்கள். இந்த ஸ்தலத்தில் உள்ள அற்புதக்கேணியின் தண்ணீரை புண்ணிய தீர்த்தம் என்று கருதி பக்தர்கள் எடுத்து செல்லுகின்றனர். நாயகத்தின் இறந்த உடலை குளிப்பாட்டி யாஹூசைன் பள்ளி.இது முதுபக்குக்கு வெளியில் தென்புறத்தில் இருக்கின்றது. நாயகத்தின் உடலை குளிப்பாட்டிய தண்ணீர் தேங்கி நின்ற சிறிய குட்டை தான் தர்கா குளம். குட்டை போலிருந்ததை அச்சை சுல்தான் பெருங்குளமாக வெட்டி தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தார்.

நாயகம் அவர்கள் 40 நாள் இறைதியானம் இருந்த புண்ணிய  ஸ்தலம் வாஞ்சூர் பள்ளிவாசல். இது நாகூரிலிருந்து 21 மைல் தொலைவில் உள்ளது. ஹஜ்ரத் ஷாஹ¨ல் ஹமீது பாதுஷா ஆண்டவர்களின் சந்நிதி 7 வாயில்கள் கொண்டது. இவை அனைத்தும் வெள்ளித் தகட்டால் வேயப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாசலிலும் நூற்றுக்கணக்கான குத்துவிளக்குகள் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன. இந்த சந்நிதிக்குள் எந்த மதத்தினரும் செல்லலாம்.

இஸ்லாமிய சட்டத்திட்டத்தின்படி கடைசி மூன்று வாசல்களை கடக்க மட்டும் பெண்களுக்கு அனுமதியில்லை. நாகூர் ஆண்டவர், அவரது மகன் முகம்மது யூசுஃப், மருமகள் செய்யிதா சுல்தான் பீவி அம்மாள் ஆகியோரின் சமாதிகள் உள்ளே அமைந்துள்ளது. நாகூர் ஆண்டவர் இடுப்பில் கட்டியிருந்த இரும்புச்சங்கிலி, குமிழ்கள் இல்லாத காலணி, அதிசயம் நிகழ்த்திய கொம்புத் தேங்காய ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அரபி மாதம் ஜமாத்துலாகிறு பிறை 1ல் தர்காவில் கொடியேற்றத் திருவிழா நடக்கும் பிறை 10ம் நாள் இரவு நாகையிலிருந்து அதி விமரிசையாக சந்தனக்கூடு புறப்பட்டு வந்து ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். பிறை 11ல் பீர் ஏகுதல் நடைபெற்று 14ம் இரவு இறுதிக்கட்டம் அடையும். இந்த திருவிழாக்களில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்கின்றனர்

Maha

Next Post

உதவ தயாராக இருக்கும் போது ஏன் நீங்கள் பேசுவதில்லை.? இந்திய வீரர்களை விளாசிய கபில் தேவ்..!

Sun Jul 30 , 2023
சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா சாதாரண இருதரப்பு தொடரில் மிரட்டலாக செயல்பட்டாலும் அழுத்தமான நாக் அவுட் போட்டிகளில் முக்கிய தருணங்களில் சொதப்பி கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருந்து வருகிறது. இதற்கு சுமாரான அணித்தேர்வு, பும்ரா போன்ற முக்கிய கிரிக்கெட் வீரர்கள் காயமடைந்து வெளியேறுவது போன்றவை காரணமாக இருந்தாலும் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக ரசிகர்கள் கொண்டாடும் […]

You May Like