இன்று பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 21,057 பேர் எழுதுகின்றனர். இதில் 7,518 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 02,568 மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 கைதிகளும் அடங்குவர்.
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உட்பட மின்சாதனம் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், வேறு கலர் பேனா கொண்டு எழுதக்கூடாது. அதேபோல், விடைத்தாள்களில் எவ்வித சிறப்பு குறியீடு, தேர்வெண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக்கூடாது. மாணவர் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 11, 12ஆம் வகுப்பைச் சேர்ந்த அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுத்தேர்வை துணிவுடனும், தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வேண்டும். தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.