மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகே போராட்டம் நிறுத்தப்படும் என டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டோம் என தமிழக அரசு தரப்பில் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரும், டங்ஸ்டன் சுரங்கம் வராது என பாஜக தலைவர் அண்ணாமலையும் போராட்டக்களத்துக்கு நேரில் வந்து உறுதியளித்தனர். இதையடுத்து டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டத்தை கைவிட பல்வேறு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு அறிவிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்; டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழக பாஜகவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது தான். அதேநேரத்தில் மத்திய கனிம வளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் கைவிடப்படுவதாக முறைப்படி அறிவிப்பு செய்து அதை அரசிதழில் வெளியிட வேண்டும். அதுவரை டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை நம்ப முடியாது.
அ.வல்லாளப்பட்டி கூட்டத்துக்கு அண்ணாமலை வந்திருந்தபோது அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவை தவிர்த்து பிற மக்கள் அனைவரும் அண்ணாமலை லண்டனிலிருந்து திரும்பியதும், டங்ஸ்டன் திட்டத்தை நல்ல திட்டம் என்று வரவேற்று பேசியுள்ளார். இதனால் மத்திய கனிம மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம் மூலம் முறையான அறிவிப்பு வந்தால் ஏற்கலாம். அதைவிட்டு ,வெற்று வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.