மத்தியப் பிரதேசம் மாநிலம் செஹோர் மாவட்டம் மொகவாலி கிராமத்தில் நேற்று திறந்த நிலையில் இருந்த 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது பெண் குழந்தை தவறி விழுந்தது. இதையடுத்து அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குழந்தையை பத்திரமாக மீட்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படையினர் பொக்லைன், ஜே.சி.பி. வாகனங்களுடன் விரைந்து வந்து சம்பவ இடத்தில் குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
சிறுமி 30 அடி ஆழத்தில் உள்ள நிலையில் மீட்புக் குழுவினர் புல்டோசர் மூலம் அருகில் உள்ள பகுதியை தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் 20 அடி ஆழத்திற்கு கீழ் முழுவதும் பாறைகளாக உள்ளதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆம்புலனஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டு குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் அறிந்த கிராமவாசிகள் அங்கு கூடியதால் பரபரப்பு காணப்படுகிறது. தவறி விழுந்த குழந்தை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட சூழலில் ஆழ்துளை கிணற்றில் விழுபவர்களை மீட்க இருப்பது இரண்டே முறைதான். ஒன்று கயிறு கட்டிக் குழந்தையை இழுப்பது, இன்னொன்று அதனருகில் அதே போன்றதோர் ஆழ்துளை கிணறு தோண்டி ஆட்களை அனுப்பி மீட்பது. இதனால் ஏற்படும் காலதாமதமானது, குழியினுள் விழுந்தவரை உயிரோடு மீட்பதற்கான வாய்ப்பை குறைத்து விடுகிறது.