நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சகமும் எடுக்கும் முடிவுகளை பொறுத்து தங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”சாலை விபத்துகளில் காயம் அடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்கும் வகையில் 688 மருத்துவமனைகளில் கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இதுவரை ஏற்பட்ட 89,605 விபத்துகளில் சிக்கியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 80.66 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் குடியரசுத் தலைவரும், உள்துறை அமைச்சகமும் எடுக்கும் முடிவுகளை பொறுத்து தங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும். நீட் தேர்வுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சரே எதிராக இருக்கிறார். கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஹெல்த் மிக்ஸ் விவகாரம், டெண்டர் விட்டு முடிந்துவிட்டது. டெண்டர் விட்டுள்ள நிறுவனம் மீது எவ்வித குற்றச்சாட்டும் எழாத நிலையில் எதற்கு கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும்? அதே நிறுவனம் வழங்கிய பொங்கல் தொகுப்பில் என்ன குறையை கண்டீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.