செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா, இல்லையா என்பது குறித்து அவருடைய கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கும், செந்தில் பாலாஜி தரப்புக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத் துறையால் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து. 472 நாட்களுக்கு பிறகு புழல் சிறையில் இருந்து கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விடுதலையானார். இருந்து வெளியே வந்தவுடன் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். இந்த நிலையில், செந்தில் பாலாஜி தொடர்பான பண மோசடி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட வித்யாகுமார் என்பவர், அவரது ஜாமீனை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா தலைமையிலான அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கில் எத்தனை அரசு பணியாளர்கள் சாட்சிகளாக உள்ளனர்?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில், “200 பேர் சாட்சிகளாக இருக்கின்றனர்” என தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்ற வழக்கில், 200 அரசு பணியாளர்கள் சாட்சிகளாக இருக்கும்போது, செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது எப்படி சரியாக இருக்கும்? செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதை விரும்புகிறாரா? அமைச்சர் ஆவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம்? இதுபோன்ற சூழலில், அவர் அமைச்சராக தொடர்ந்தால், சாட்சிகளாக இருக்கும் 200 அரசுப் பணியாளர்கள் எப்படி சாட்சியம் அளிப்பார்கள்? என கேள்வி எழுப்பினர். இதையடுத்து, செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா, இல்லையா என்பது குறித்து அவருடைய கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கும், செந்தில் பாலாஜி தரப்புக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.