ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் குறித்து, முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாக பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் அமைச்சர் சக்கரபாணி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதாவது, எந்த காரணம் கொண்டும் பொருட்கள் தேங்கியிருக்க கூடாது, தேங்கும் பொருட்களை கடையில் இருப்பு வைக்காமல், கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதற்கு காரணம், ரேஷன் அட்டைதாரர்கள் சிலர், தங்களது ரேஷன் அட்டைகள் மூலமாக வழங்கப்படும் பொருட்களை வாங்குவதில்லையாம்.
இதனால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் மளிகை பொருட்கள் தேங்கி விடுகிறது. இந்த பொருட்களை சிலர் கள்ளத்தனமாக விற்றுவிடுவதாக புகார்கள் வந்துள்ளன. அதனால்தான், பொருட்களை வாங்காமல் தாமதித்தால், அப்பொருட்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ரேஷன் கடைகளில் உள்ள விற்பனை முனைய கருவிகளில், ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்களின் விரல் ரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வேறு யாரையாவது தங்களுக்கு பதிலாக அனுப்பி, பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அப்படி கைரேகை பதியும்போது, 2 முறை சரியாக பதிவாகவில்லை என்றால், அடுத்த முறை தானாகவே பொருட்கள் வழங்க அனுமதிக்கும் வகையில் சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை பயன்படுத்தி, சில ஊழியர்கள், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை வாங்கியதுபோல பதிவு செய்து, கள்ளச்சந்தையில் விற்றுவிடுகிறார்களாம்.
அதனால்தான், பிராக்சி முறையை பயன்படுத்தக் கூடாது என்றும் விரல்ரேகை சரியாக பதிவாகும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனாலும், பலரும் சரியாக பின்பற்றுவதில்லையாம். இப்படி உத்தரவை பின்பற்றாத ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப் போகிறார்களாம். பிராக்சி முறையில் வழங்கப்பட்ட கார்டுதாரர்களை தொடர்பு கொண்டு, “என்னென்ன பொருட்கள் வாங்கினார்கள்” என்று கேட்கப்படுகிறதாம். அவர்கள் வாங்காத பொருட்கள் பதிவாகியிருந்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் கிலோ அரிசிக்கு, 25 ரூபாயும், பருப்பு, பாமாயிலுக்கு தலா, 75 ரூபாயும் அபராதம் வசூலிக்கப்போவதாக கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.