கோடை காலத்தில் வறட்சி அடையும் நம் நாவுக்கு நீர்ச்சத்து கொடுக்கும் விதமாக வெவ்வேறு விதமான உணவுகள், பானங்களை நாம் எடுத்துக் கொள்கிறோம். அந்த வகையில், இனிப்புச் சுவையுடன், ஜில்லென்று கரையும் குல்ஃபியை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. குல்ஃபியின் ஒவ்வொரு பிளேவரும் ஒவ்வொரு சுவையைத் தரும். பிஸ்தா குல்ஃபி, பாதாம் குல்ஃபி, மேங்கோ குல்ஃபி என்று அதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். மாநகர வீதிகளில் நள்ளிரவு நேரத்திலும் கூட குல்ஃபி வண்டிகள் வலம் வந்து கொண்டிருக்கும்.
பல பேரின் விருப்ப உணவாக இருக்கும் குல்ஃபி-யை ஜொலி ஜொலிக்கும் தங்க நகைகளுடன் வியாபாரி ஒருவர் விற்பனை செய்து வருகிறார். அவரிடம் ‘தங்க குல்ஃபி’ கூட கிடைக்கிறது. தங்கத்தில் எப்படி குல்ஃபி கிடைக்கும், அதை எப்படிச் சாப்பிட முடியும் என்று நினைக்காதீர்கள். இவர் கையோடு கொண்டு வரும் 24 காரட் தங்க இழை பேப்பரில் சுற்றித்தான் குல்ஃபியை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறார். இந்த தங்க குல்ஃபியை ரூ.351க்கு விற்பனை செய்கிறார். மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூர் அருகே உள்ள சராஃபா என்னும் இடத்தில் தான் இந்த வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடையின் பெயர் பிரகாஷ் குல்ஃபி ஆகும். அவரது குல்ஃபி வியாபாரம் குறித்து கைலாஷ் சோனி என்ற உணவு ரிவியூவர் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.