லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் சேஷு சில தினங்களுக்கு முன்பு காலமானார். இந்நிலையில், அவருடைய மரணம் குறித்து சிலர் தவறான தகவல்கள் பரப்பி வருவதாக லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் பழனியப்பன் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “எல்லோருக்கும் வணக்கம் நான் இப்போ எதுக்காக இந்த வீடியோ வெளியிட்டு இருக்கிறேன் என்றால் சேஷு அண்ணாவோட மரணத்தை பற்றி தான் பேசப்போகிறேன்.
சேஷு அண்ணனுடைய மரணம் எங்க எல்லாருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏன்னா நாங்க எல்லாருமே 20 வருஷத்துக்கு மேல டிராவல் பண்ணிட்டு இருக்கோம். இப்போ அவருடைய இறப்பு பற்றி ஒரு சில ஊடகங்கள் சரியாக எழுதி இருக்கின்றனர். ஆனால், ஒரு சில ஊடகங்கள் சிலர் தவறாக பேசுவதை வைத்து தவறாக எழுதி வருகிறார்கள். சேஷு அண்ணாவைப் பற்றி தெரியாதவர்கள் கூட தங்களுக்கு மைக் கிடைத்துவிட்டது என்று கண்டமேனிக்கு பேசியிருக்கிறார்கள்.
சேஷு அண்ணாவுக்கு 10 லட்சம் ரூபாய் சிகிச்சைக்கு இல்லாததால் தான் அவர் மரணம் அடைந்து விட்டார் என்று சிலர் பேசியிருக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை, அவருக்கு பலருடைய உதவிகள் கிடைக்கத்தான் செய்திருந்தது. ஆனால் சில நடிகர்கள், ஏன் அந்த நடிகர்கள் உதவி செய்யவில்லை இந்த இயக்குனர் உதவி செய்யவில்லை என்று சிலரை குறிப்பிட்டு பேசி கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் உதவி செய்யவில்லை என்று யாருக்காவது தெரியுமா? எல்லோரும் தங்களால் முடிந்ததை செய்யத்தான் செய்திருந்தார்கள்.
ஆனால், அதை தெரியாத ஒரு சிலர் தங்களுடைய பிரபலத்துக்காக இந்த மாதிரி தவறான தகவல்களை பேசியுள்ளனர். ஆனால், அது உண்மையில் நடந்தது கிடையாது. சேஷு அண்ணாவிற்கு அவருடைய நெருங்கிய வட்டாரத்திலிருந்து ரசிகர்களாகவோ அதிகமான உதவிகள் செய்திருந்தார்கள். ஆனாலும், அவருடைய இறப்பு வந்துவிட்டது. அது எல்லோருக்கும் அதிர்ச்சி தான். ஆனால், நடிகர் சந்தானம் இயக்குனர் ராஜ் போன்றோர் உதவவில்லை என்று தவறாக பேசிக் கொண்டிருக்க வேண்டாம்” என்று அந்த வீடியோவில் பழனியப்பன் பேசியிருக்கிறார்.
இந்த வீடியோவிற்கு அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் சேஷு இறந்த அன்று நடிகர் டெலிபோன் ராஜ், சேஷுவுக்கு ரூ.10 லட்சம் பணம் கொடுத்து யாரும் உதவி செய்யாததால் தான் அதனால் அவர் இறந்துவிட்டார் என்று சொன்னார். அவரை தான் பழனியப்பன் பேசி இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.