தற்போது தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. வீடுகளிலும் செல்லப்பிராணியாக நாய்களை வளர்க்கவே பலரும் விரும்பி வருகிறோம். வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு பெரும்பாலானவர்கள் நோய்களுக்கான தடுப்பூசி போட்டிருப்போம். ஆனால் தெரு நாய்களுக்கு அப்படியில்லை. தெரு நாய்கள் திடீரென்று கடித்தால் என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேலானவர்கள், வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெறி நாய் கடிபட்டவர்களில் 5 முதல் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 50 சதவிகிததிற்கும் மேலானவர்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. நாய் கடித்து விட்டால் என்ன செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
நாய் கடித்தவுடன் ஓடும் தண்ணிரில் கடித்த இடத்தை நன்கு கழுவ வேண்டும். பின் கிருமிநாசினியை வைத்து அந்த இடத்தை நன்கு துடைத்து எடுக்க வேண்டும். இதை செய்த பின் கால தாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை சந்தித்து ரேபீஸ் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். மேல் சிகிச்சை தேவைபட்டால் மருத்துவரின் அறிவுரைப்படி கட்டாயமாக சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.
தடுப்பூசிகள் போடாத பட்சத்தில் கடித்த இடம், கிருமியின் அளவு போன்றவற்றைப் பொறுத்து 6 வருடங்கள் வரை தாமதமாக நோய் வரலாம். ஒரு சிலருக்கு 2முதல் 10 நாட்களிலேயே அறிகுறி ஆரம்பித்து மரணம் நிகழலாம். எனவே நாய் கடித்தாலோ, நகம் கீறினாலோ உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.