கோவை, சூலூர் பகுதியில் அமைந்துள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் நவீன மருத்துவ வசதிகளின் பயன்பாட்டை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார். சூலூரில் அமைந்துள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு அதி நவீன மருத்துவ சேவையை வழங்கி வருகிறது.
பல்வேறு மருத்துவ வசதிகளுடன் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் கூடுதல் வசதிகளாக அதி நவீன கேத் லேப், எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு போன்ற மருத்துவ வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் நல்லா ஜி. பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். அதிநவீன மருத்துவ வசதிகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த பின் உரையாற்றிய அமைச்சர் மா. சுப்ரமணியன் “கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு இந்த மருத்துவமனை சிறந்த சேவையாற்றி வருவதாக” தெரிவித்தார்.
மேலும் 1990-ஆம் ஆண்டு கலைஞர் அவர்களால் 200 படுகைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனை இன்று பல்வேறு சிறப்பு வசதிகளுடன் 2000 படுக்கை வசதிகளோடு” மல்டி ஃபெசிலிட்டி மருத்துவமனையாக விளங்கி வருகிறது என தெரிவித்தார் . இதன் மூலம் முன்னாள் முதல்வர் கலைஞர் எவ்வளவு கைராசிக்காரர் என்பதும் அவர் தொட்டதெல்லாம் தங்கமாகும் என்பதும் நிரூபணம் ஆகி இருக்கிறது” என தெரிவித்திருக்கிறார்.