ஒருவருக்கு குறுந்தகவல் அனுப்புவதற்கும், ஒரு விஷயத்தை பகிர்வதற்கும், புகைப்படம், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களை அனுப்பவும், பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வாட்ஸ் அப் செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மக்களின் தேவைகளை புரிந்து கொண்டு, அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் வழங்கி வருகிறது.
சமீபத்தில் கூட வாட்ஸ்அப்பில் ஒரு முக்கிய அப்டேட் கொண்டு வரப்பட்டது. அதாவது, இதுவரை 1 நிமிடத்திற்கு மட்டுமே வீடியோவை ஸ்டேட்டஸாக வைக்க முடிந்த நிலையில், தற்போது 1.5 நிமிடங்கள் (90 வினாடிகள்) வரை வீடியோவை ஸ்டேட்டஸாக வைக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகின.
இந்நிலையில் தான், தற்போது மீண்டும் ஒரு அப்டேட்டை வாட்ஸ் அப் பயனர்களுக்கான அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் நண்பர்களுடன் உரையாடும்போது, உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காக ஸ்டிக்கர் ஆப்சன் வாட்ஸ் அப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ் அப் உருவாக்கிய ஸ்டிக்கரைத் தவிர வேறு ஸ்டிக்கரை பயன்படுத்த வேண்டுமென்றால், வேறொரு செயலியின் மூலம் ஸ்டிக்கரை உருவாக்கி பிறகு வாட்ஸ் அப்பில் பயன்படுத்தும்படியாக இருந்தது.
ஆனால், வாட்ஸ் அப் பயனர்கள் வேறு செயலிக்கு செல்லாமல், வாட்ஸ் அப்பிலேயே ஸ்டிக்கரை உருவாக்கும் அம்சம் கொண்டுவரப்பட்டது. தற்போது, பயனர்கள் உருவாக்கும் ஸ்டிக்கரை ஒருங்கிணைத்து வைக்கும் வகையில், பேக் ஆப்சன் கொண்டுவரப்பட்டது. அதாவது, பல்வேறு பூக்களின் புகைப்படங்கள் ஸ்டிக்கராக உருவாக்கி வைத்திருந்தால், அதை அனைத்தையும் ஒன்றிணைத்து பூக்கள் என்ற பேக்கேஜில் கொண்டு செல்லும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த பேக்கேஜில் இருக்கும் ஸ்டிக்கரை உங்களின் நண்பர்களுக்கு மொத்தமாகவும் அனுப்பிக் கொள்ளலாம்.
ஸ்டிக்கர் பேக்கை உருவாக்க என்ன செய்ய வேண்டும்..?
* ஸ்டிக்கர் ஆப்சனைத் திறக்க வேண்டும்.
* அதில், பென் இலட்சினையைத் தொடவும்.
* நீங்கள் சேர்க்க விரும்பும் ஸ்டிக்கர்களைத் தேர்ந்தெடுத்து, அதற்கு பொருத்தமான பெயரை வைக்கலாம்.
* பின்னர், அந்த ஸ்டிக்கர் பேக் அருகில் உள்ள 3 புள்ளிகளைத் தொட்டு, எவ்வளவு ஸ்டிக்கரை வேண்டுமானாலும் ஒரே நேரத்தில் அனுப்பிக் கொள்ளலாம்.