வெற்றி மாறன் படங்கள் இயக்குவது மட்டுமின்றி, படங்களை தயாரித்தும் வருகிறார். இவரது, கிராஸ் ரூட்ஸ் புரொடக்ஷன் நிறுவனம், தற்போது தயாரித்துள்ள படம்தான் ’பேட் கேர்ள்’. இப்படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த டீசரை பார்த்த நெட்டிசன்கள், சில இயக்குனர்கள் கலாச்சார சீரழிவை முன்னிறுத்துவதாக தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த டீசரில், தோழிகளிடம் தனது மனதினைக் கவர்ந்த இளைஞர் குறித்தும் அவனிடம் தன்னை கவர்ந்த விஷயங்கள் குறித்து பேசும் இளம்பெண், ஒரு இளைஞனிடம் நெருங்கிப் பழகும்போது, தனது மனதில் பட்டதைப் பேசுகிறாள்.
குறிப்பாக, நீ ப்ளூ ஃபிலிம் பார்ப்பியா என இளைஞரிடம் கேட்கிறார். அதேபோல் உனக்கு எப்போது முதல் முறையாக பீரியட்ஸ் வந்தது என அந்த இளைஞன் கேட்கிறான். மற்றவர்களை எல்லாம் விட நீதான் வேண்டும் என கூறுகின்றாள். இந்நிலையில், இது பற்றி இயக்குனர் மோகன் ஜி தன்னுடைய சமூக வலைத்தளத்தில், “ஒரு பிராமணப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது, ஒரு சிலருக்கு தைரியமான மற்றும் புதுமையான படமாகும். பிராமண அப்பா-அம்மாவை திட்டுவது, ட்ரெண்டிங் அல்ல. முதலில் உங்கள் சொந்த குடும்பத்தினரிடம் அதைக் காட்டுங்கள்” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
அதேபோல் சிலர் ‘காதலிக்க நேரமில்லை’ படத்துடன், இப்படத்தை ஒப்பிட்டு மற்றொரு கலாச்சார சீரழிவை முன்னிறுத்தும் திரைப்படம் என கூறி வருகின்றனர். பள்ளி படிக்கும் மாணவிகளை எப்படி தவறாக சித்தரிக்க முடியும் என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ள நிலையில், இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், இயக்குனர் வர்ஷா பேசியதற்கும், எதிர்ப்புகள் எழுந்துள்ளது. பெண் என்றால் பத்தினியாக தான் இருக்க வேண்டுமா..? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பெண் என்றால் பத்தினி தன்மை, தாய்மை, பூப்போல தான் இருக்க வேண்டுமா..? எதற்கு அவளை ஒரு வட்டத்தில் அடைக்கிறீங்க என வர்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். இவரின் பேச்சு, கலாச்சார முறையை சீரழிக்கும் விதத்தில் உள்ளதாகவே பார்க்கப்படுகிறது. எனவே, பலரும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அதே நேரம் பா.ரஞ்சித் போன்ற பலர் இந்த படத்தின் டீசருக்கு வாழ்த்து கூறி வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கடந்த சில ஆண்டுகளில் பல படங்களில் திரையரங்கிற்கு வந்துள்ளது. அப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வெற்றியும் பெற்றுள்ளது. அந்த வகையில், இந்தப் படமும் விமர்சன ரீதியாக வெற்றிப் படமாக அமையும் என படக்குழு எதிர்பார்த்துள்ளது.