அனைத்து வகை தனியார் பள்ளிகளும் அக்டோபர் 3-ம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 8-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது.
பள்ளிக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் அக்டோபர் 3-ம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ் முருகன், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2023-2024ஆம் கல்வியாண்டில், காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு பாடத்திட்டத்தில் செயல்படும் அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் முதல் பருவம், காலாண்டுத் தேர்வு விடுப்பு முடிந்து அக்டோபர் 3-ம் தேதி, அனைத்து வகை தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டு செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.