குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் திட்டமிட்டபடி வெளியாகும் எனடிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகரன் கூறுகையில், டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி, அனைத்து தேர்வுகளும் குறிப்பிட்ட தேதியில் நடத்தி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். அந்த வகையில், குருப்-1 தேர்வு மற்றும் குருப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் திட்டமிட்டபடி வெளியிடப்படும். அரசு துறைகளிடமிருந்து காலிப்பணியிடங்களின் விவரம் மார்ச் இறுதியில் எங்களுக்கு கிடைக்கும். தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும்போது காலிப்பணியிடங்களின் முழுவிவரமும் அதில் குறிப்பிடப்படும்.
தேர்வு எழுதுவோரின் வசதிக்காக விடைத்தாள் நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளோம். இந்த ஆண்டு முதல் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படும். எனவே, விடைத்தாள் பக்கத்தை தேர்வர்கள் எந்தவிதமான சந்தேகமோ, குழப்பமோ இல்லாமல் மிக எளிதாக பூர்த்தி செய்ய முடியும். தேர்வர்கள் எளிதாக விடையளிக்கும் வகையில் விடைத்தாள் நடைமுறை அமைந்திருக்கும். தேர்வு முடிவுகளை விரைவாகவும் அதேநேரத்தில் சிறு தவறுகூட இல்லாமல் நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் டிஎன்பிஎஸ்சி உறுதியாக இருக்கிறது.
உதவி சுற்றுலா அலுவலர் உதவி பொறியாளர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தொழில் தேர்வுக்கான மதிப்பின் தரவரிசை பட்டியல் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது. தற்போது ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் முழு பட்டியல் வெளியாகும். குரூப்-1 சி தேர்வின் கீழ் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட முதல் நிலை தேர்வு முடிவுகள் உயர் நீதிமன்ற வழக்கு காரணமாக வெளியாகவில்லை. அதனை வெளியிட சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்