சாதிக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலை.யில் சாதி குறித்து தேர்வில் கேட்கப்பட்டது மன்னிக்கவே முடியாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முதுகலை வரலாறு மாணவர்களுக்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வில், தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி? என்கிற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்ட இந்த கேள்வியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ‘வினாத்தாள்கள் வெளிக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் மூலம் தயாரிக்கப்படுவதாகவும் வினாத்தாள்களை சரிபார்த்தால் கசிந்துவிடும் என்பதால், முன்கூட்டியே வினாத்தாள்களை படிப்பதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவர், இந்த கேள்வி குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மறு தேர்வு குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு இரண்டாம் பருவத் தேர்வில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினா எழுப்பப்பட்டு, அதற்கு மகர்கள், நாடார்கள், ஈழவர்கள், ஹரிஜன்கள் ஆகியவற்றிலிருந்து ஒன்றை தேர்வு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. தேர்வுகளில் மாணவர்களின் கற்றல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன்களை அறிய பல வழிமுறைகள் இருக்கும் நிலையில், இப்படி ஒரு வினா எழுப்பப்பட்டது தவறு. இது வினாத்தாள் தயாரித்தவர்கள் மற்றும் தேர்வு நடத்தியவர்களின் சாதிய வன்மத்தையே காட்டுகிறது. இது கண்டிக்கத்தக்கது..!
வினாத்தாள் வெளியில் இருந்து பெறப்பட்டது தான் இந்த தவறுக்கு காரணம் என துணைவேந்தர் கூறுவது இந்த குற்றத்தை மூடி மறைக்கும் செயல். வினாத்தாளை பல்கலைக்கழக நிர்வாகம் சரிபார்த்திருக்க வேண்டும். அத்தகைய நடைமுறை பெரியார் பல்கலை.யில் இருக்கும் போது இந்த குற்றம் எப்படி நடந்தது? சாதிக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலை.யில் இக்கொடுமை நடந்திருப்பதை மன்னிக்கவே முடியாது. வினாத்தாள் தயாரித்தவர்கள், அதை சரிபார்க்கத் தவறியவர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்..!” என்று பதிவிட்டுள்ளார்.