இந்திய சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு 100 கோடி வசூல் என்பதே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த நிலை மாறி தற்போது 1000 கோடி வசூல் என்பது புதிய மைல்கல்லாக மாறி உள்ளது. நல்ல திரைக்கதை, பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் அசத்தலான நடிப்பு ஆகியவை மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை இந்திய சினிமா ஈர்த்து வருகிறது.
பாலிவுட் மற்றும் டோலிவுட் மற்றும் சாண்டல்வுட், கோலிவுட் போன்ற பிராந்திய திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்தி வருகின்றன. மேலும் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தும் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
ரூ. 1000 கோடி கிளப் என்பது மிகவும் முக்கியமான மைல்கற்களில் ஒன்றாகும். அந்த வகையில் இதுவரை இந்தியாவில் 1000 கோடி வசூல் செய்த படங்கள் எத்தனை? எந்த மொழி படங்கள் அதிகமாக 1000 கோடி கிளப்பில் இணைந்துள்ளன? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 8 படங்கள் ரூ. 1000 கோடி கிளப் படங்களில் இடம் பிடித்துள்ளன. இதில் அதிகபட்சமாக 4 டோலிவுட் படங்கள் உள்ளன.
ரூ. 1000 கோடி வசூல் படங்கள் :
டோலிவுட் (தெலுங்கு) : 4 படங்கள்
பாலிவுட் (ஹிந்தி): 3 படங்கள்
சாண்டல்வுட் (கன்னடம்) : 1 படம்
கோலிவுட் (தமிழ்) : 0 படங்கள்
மாலிவுட் (மலையாளம்) : 0 படங்கள்
இந்த அசாதாரண சாதனையை நிகழ்த்திய நடிகர்கள் யார் யார்?
ரூ. 1000 கோடி கிளப்பில் ஷாருக்கான், பிரபாஸ், அமீர்கான் உள்ளிட்ட நடிகர்கள் இடம்பிடித்துள்ளனர்.
ஷாருக்கான் : ஷாருக்கானின் பதான் மற்றும் ஜவான் ஆகிய படங்கள் 1000 கோடி கிளப்பில் இணைந்துள்ளன. இதில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான பதான் படம் உலகளவில் ரூ. 1055 கோடி வசூல் செய்தது. மேலும் ஷாருக்கானின் கம்பேக்கை உறுதி செய்ததும் இந்த படம் தான்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானின் நடிப்பில் வெளியான ஜவான் படம் உலகளவில் ரூ. 1160 கோடி வசூல் செய்து பல சாதனைகளை முறியடித்தது. இந்திய சினிமாவில் ஷாருக்கானின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியது.
அமீர்கான் : நித்திஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் இயக்கத்தில் வெளியான டங்கல் படம் தான் இந்தியாவின் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. இந்த படம் உலகளவில் ரூ. 2070 கோடி வசூல் செய்துள்ளது. இதுவரை இந்த படத்தின் வசூல் சாதனையை எந்த படமும் முறியடிக்கவில்லை.
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர்: எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR உலகம் முழுவதும் 1200 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கார் விருது கிடைத்தது.
பிரபாஸ் : எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த படம் உலகளவில் ரூ. 1788 கோடி வசூல் செய்துள்ளது.
1000 கோடி கிளப்பில் உள்ள பிரபாஸின் மற்றொரு பாம் கல்கி 2898 ஏடி. நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் உலகளவில் ரூ.1200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
யாஷ் : பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கன்னட பிளாக்பஸ்டர் படமான கேஜிஎஃப் 2, உலகம் முழுவதும் 1200 கோடி வசூல் செய்தது. இந்த படத்தின் மூலம் யாஷ் மட்டுமின்றி கன்னட திரையுலகமும் பிரபலமானது.
அல்லு அர்ஜுன் : சுகுமாறன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் வெளியான முதல் நாளிலேயே 294 கோடி வசூலித்தது. இதுவரை இல்லாத அளவுக்கு வெறும் 6 நாட்களில் 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.
1000 கோடி கிளப்பில் பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம் சரண் என பல தென்னிந்திய நடிகர்கள் இடம்பெற்றிருந்தாலும் இதில் ஒரு தமிழ் நடிகர் கூட இதில் இடம்பிடிக்கவில்லை. இனியாவது இந்த பட்டியலில் தமிழ் படங்கள் இடம்பெறுமா? எந்த தமிழ் நடிகரின் படம் முதல் 1000 கோடி வசூல் படமாக மாறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Read More : சிறையில் இருந்து வந்த அல்லு அர்ஜுனை கண்ணீருடன் கட்டிப்பிடித்த மனைவி… எமோஷனல் வீடியோ…